திருநெல்வேலி

புகார் அளிக்கச் சென்றவர்களிடம் விசாரணை: எஸ்டிபிஐ கட்சியினரை விடுவிக்கக் கோரி அச்சன்புதூர் காவல் நிலையம் முற்றுகை

16th Aug 2019 09:59 AM

ADVERTISEMENT

செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூர் காவல் நிலையத்தை வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட்டனர்.
செங்கோட்டை வட்டம், வடகரையைச் சேர்ந்த அப்துல் பாசித், முஹம்மது இஸ்மாயில் ஆகியோரது இருசக்கர வாகனம் வியாழக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது. வாகனங்கள் தீப்பற்றி எரிவதை கண்ட சிலர் உடனடியாக தீயை அணைத்தனர். இருப்பினும் வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.
இந்நிலையில், வாகனம் எரிக்கப்பட்டது சம்பந்தமாக அச்சன்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த அப்துல் பாசித், முஹம்மது இஸ்மாயில் ஆகிய இருவரிடமும் விசாரணை செய்ய வேண்டும் என தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் மனோகரன் ஆகியோர் தெரிவித்து அவர்களை வெளியே அனுப்ப மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, புகார் கொடுக்கச் சென்ற இருவரையும் வெளியே விடக் கோரி அச்சன்புதூர் காவல் நிலையத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் ஜாபர் அலி உஸ்மானி தலைமையில் கட்சியினர் வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்டனர். நீண்ட நேரத்துக்குப் பின்பு இருவரையும் போலீஸார் விடுவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT