சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் உடமைகளையும், ரயில் நிலைய வளாகத்திலும் போலீஸார் சனிக்கிழமை சோதனை செய்தனர்.
சுதந்திர தின விழா இம் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அருள் ஜெயபால், ரயில்வே போலீஸ் ஆய்வாளர் கிரண் ஆகியோர் தலைமையில் சோதனை நடைபெற்றது.
மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு, மோப்பநாய் பிரிவு போலீஸார் நவீன கருவிகளுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலைய நடைமேடைகள், பயணிகள் காத்திருக்கும் அறை, பார்சல் அலுவலகம், ரயில் பெட்டிகள், தண்டவாளப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர்கள் சரவணமுருகன், முத்தமிழ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் நாராயணன், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.