திருநெல்வேலி

நெல்லையில் அதிவேகமாக பைக் ஓட்டிய இளைஞர்களுக்கு போலீஸார் நூதன தண்டனை!

11th Aug 2019 05:56 AM

ADVERTISEMENT


திருநெல்வேலியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை இயக்கிய இளைஞர்களுக்கு விபத்துகளின் விபரீதங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதன தண்டனை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் இரவு நேரங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக இயக்குவதோடு, சாலைவிதிகளை மீறி போட்டிகளை நடத்துவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகர காவல் ஆணையர் வழிகாட்டுதலின்படி போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக இயக்கப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்களை மாநகர போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.இதுதவிர சைலன்சர் மாற்றம், பதிவெண் இல்லாமை உள்ளிட்ட விதிமீறல்களுக்காக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அதிவேகமாக மோட்டார் சைக்கிளை இயக்கிய இளைஞர்களுக்கு விபத்துகளின் விபரீதங்களை புரிய வைக்கும் வகையில் நூதன தண்டனைவழங்கப்பட்டது. அதன்படி அந்த இளைஞர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவுக்கு போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு நோயாளிகளின் துன்பங்களை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து மாநகர காவல்துறை வட்டாரங்கள் கூறியது: சாலைகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை இளைஞர்கள் இயக்குவதைத் தடுக்க பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும். 200 சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். 
திருநெல்வேலியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை இயக்கிய 11 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்துக்குள்ளாகும் நபர் எத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் அவர்கள் குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்து நேரடியாக அறிந்து கொள்ளச் செய்யப்பட்டது. இதுதவிர எலும்பு முறிவு உடல்நலனில் எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும் என்பது குறித்து மருத்துவர் சேது விளக்கமளித்தார். ஆகவே, மாநகர பகுதியில் இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT