அம்பாசமுத்திரத்தில் ஆடித் தவசு விழா நடைபெற உள்ளதையடுத்து, இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அம்பாசமுத்திரத்தில் உள்ள சின்ன சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை (ஆக.13) ஆடித் தவசு விழா நடைபெற உள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்நிலையில் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜாஹிர் ஹூசைன் தலைமை வகித்தார்.
வாகனங்கள் நிறுத்துமிடம், கண்காணிப்புக் கேமரா பொறுத்துவது, காவல்துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை பாதுகாப்பு மற்றும் வாகனம் ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபடுத்துவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில், காவல் ஆய்வாளர் விஜயகுமார், காவல் உதவி ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், சோனியா, செந்தில்வேல், அரசுப் போக்குவரத்துக் கழக பாபநாசம் பணிமனை மேலாளர் சங்கர், கிராம நிர்வாக அலுவலர் கணேசன், தீயணைப்பு நிலைய எழுத்தர் விஸ்வநாதன், சங்கரன்கோவில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ராஜகோபால், சுப்பிரமணியன், முருகேசன், சுவாமிகுருநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்