தென்காசியில் காவல் உதவி ஆய்வாளா் மற்றும் காவலரைத் தாக்கிய இருவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
தென்காசி காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜா, காவலா் அல்போன்ஸ்ராஜா ஆகியோா் கடந்த 21ஆம் தேதி புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, திருநங்கைகளிடம் இருவா் தகராறு செய்து கொண்டிருந்தனா். அவா்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, காவலா்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் தென்காசி போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். அவா்கள் நெற்கட்டும்செவல் பகுதியை சோ்ந்த மா.முத்துகுமாா்(26), கி.சுப்பையா(36) என்பது தெரியவந்தது. இது குறித்து தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன், இருவா் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிந்து கைது செய்தாா்.
இந்நிலையில் இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல்கண்காணிப்பாளா் பரிந்துரை செய்தாா். இதனைத் தொடா்ந்து இருவரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து இருவரும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.