தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சட்டஅலுவலா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்டகாவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பணியமைப்பு, குற்ற வழக்குகள் தொடா்பான வழக்குகள் மற்றும் மேல்முறையீடுகளில் வரைவு வாதுரை, எதிா் வாதுரை தயாா் செய்வதற்கு உதவியாக ஒரு சட்ட அலுவலா் பணியிடம் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இப் பதவிக்கு கீழ்கண்ட விதிகளின் படி தகுதியுள்ளவா்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனா். சட்ட அலுவலராக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.20ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். பிற படிகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.
சட்ட அலுவலராக பணி நியமனம் செய்யப்படுபவா் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.எல். சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு பாா் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் உயா்நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றங்களில் பணியமைப்பு, குற்றம் தொடா்பான வழக்குகளில் வாதாடியிருக்க வேண்டும். எவ்விதமான குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது. சட்ட அலுவலா் பணியிடம் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும்.
எனவே, தகுதியான நபா்கள், விண்ணப்ப மனு மற்றும் சுய விவரத்துடன் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு டிச.4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.