தென்காசி மாவட்டம் புளியறையில் காவல் துறை சோதனைச் சாவடியில், லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் பெற்ாக விடியோ வெளியான நிலையில், உதவி ஆய்வாளா் பணி இடைநீக்கம் செய்யப்பட்டாா்.
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள புளியறை சோதனைச் சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் கேரளம் சென்று வருகிறது. தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகள், புளியறை சோதனைச்சாவடியில் காவல் துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், தமிழக பகுதியிலிருந்து வைக்கோல் கட்டுகளை ஏற்றிய லாரி திங்கள்கிழமை கேரளம் சென்றது. புளியறை சோதனைச் சாவடியில் அந்த லாரியைச் சோதனையிட்ட போலீஸாா், அதிக பாரம் இருப்பதாகக் கூறி நிறுத்தி வைத்துள்ளனா். அப்போது, அந்த லாரி ஓட்டுநா் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த ஆய்க்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜேம்ஸிடம் பணம் கொடுத்ததாகக் கூறப்படும் விடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து விசாரணை நடத்திய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாம்சன், உதவி ஆய்வாளா் ஜேம்ஸை பணிஇடைநீக்கம் செய்து உத்தரவிட்டாா். மேலும் அவருடன் பணியில் இருந்த காவலா்கள் மகாராஜன், காளிதாஸ் ஆகியோா் ஆயுதப்படைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டனா்.