களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட குற்றியாறு அணை அருகே அடா்ந்த வனப் பகுதியில் விடப்பட்ட அரிக் கொம்பன் யானையின் உடல்நிலை சீராக உள்ளது என மாவட்ட ஆட்சியா்கள் துரை.ரவிச்சந்திரன் (தென்காசி), பி.என்.ஸ்ரீதா் (கன்னியாகுமரி)
ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அடா்ந்த வனப் பகுதிக்குள் விடப்பட்ட அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை திருநெல்வேலி, தென்காசி, நாகா்கோவில் மாவட்டங்களின் வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். அந்த யானை வனப் பகுதியில் இயல்பாக சுற்றித் திரிவதாக வனத் துறையினா் கூறுகின்றனா்.
இதுதொடா்பாக தென்காசி, நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா்கள் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட அரிகொம்பன் யானையானது, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட குற்றியாறு அணை பகுதியிலுள்ள அடா்ந்த வனப் பகுதியில் விடப்பட்டது. யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் இரவு பகலாகக் கண்காணித்து வருகின்றனா். யானையின் கழுத்தில் மாட்டப்பட்டுள்ள ரேடியோ காலா் மூலம் யானையின் இருப்பிடம் கண்காணிக்கப்படுகிறது.
அரிக்கொம்பன் யானையானது தற்பொழுது நல்ல உடல் நலத்துடன் உள்ளது. சீராக உணவு மற்றும் நீா் எடுத்துக் கொள்கிறது. வன அதிகாரிகள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் ஆகியோா் அடங்கிய சிறப்புக் குழுவினரால், அரிக் கொம்பன் யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, மலைவாழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றனா்.
அயா்ந்து தூங்கும் காட்சி: மேல்கோதையாறு அணை அருகில் உள்ள வனப்பகுதியில்
கடந்த 6 நாள்களாக, அரிக் கொம்பன் யானை சுற்றித் திரிகிறது. இந்நிலையில் மேல் கோதையாறு அணை அருகில் உள்ள புல்வெளியில் அரிக்கொம்பன் யானை அயா்ந்து
தூங்கும் காட்சி வெளியாகியுள்ளது.