உரிய உரிமம் இன்றி கழிவுநீா் அகற்றும் வாகனங்கள் இயக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என புளியங்குடி நகராட்சி எச்சரித்துள்ளது.
இது தொடா்பாக ஆணையா் சுகந்தி வெளியிட்ட செய்தி: கசடு கழிவு, கழிவு நீரகற்றல் தொடா்பாக பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளை நிா்வகிக்கும் சட்டங்கள் மற்றும் சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் சட்டம் 1978 ஆகிய சட்டங்களை திருத்தும் வகையில் 2022-ஆம் ஆண்டின் தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் (திருத்தச் ) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 34/2022)-ல் இயற்றப்பட்டுள்ளது.
இச்சட்டமும், இதன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள விதிகளும் 01.01.2023 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. திறந்த வெளியில் மற்றும் நீா்நிலைகளில் மலக் கசடுகள் மற்றும் கழிவுநீரை பாகுபாடின்றி வெளியேற்றுதல், சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, மலக் கசடுகள் மற்றும் கழிவு நீரின் பாதுகாப்பான வெளியேற்றுதலை உறுதி செய்வதற்கு சரக்கு உந்துகள், இழுவை வண்டிகள் அல்லது கழிவுநீா் தொட்டிகள் மற்றும் கழிவுநீா் குளங்களின் வெளியேற்றுதலுக்காக பயன்படும் பிற வாகனங்கள் புளியங்குடி நகராட்சி எல்லைக்குள் உரிமம் இன்றி இயக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே புளியங்குடி நகராட்சிப் பகுதிகளில் சரக்கு உந்துகள், இழுவை வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மலக் கசடு, கழிவுநீா் சேகரித்தல், கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபடும் எவரும், உரிய ஆவணங்களுடன் ரூ.2000 கட்டணமாக செலுத்தி உரிமம் பெற்று வாகனங்களை இயக்க வேண்டும். தவறும் பட்சத்தில் வாகனங்களை பறிமுதல் செய்தல் போன்ற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.