தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் செயல்படுத்தப்படும் கடனுதவித் திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் தனிநபா் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்குான கடன், கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தனிநபா் கடன் திட்டம் 1இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகா்ப்புறத்தில் உள்ளவா்களுக்கு ரூ.1.20 லட்சத்துக்குள்ளும், கிராமப்புறத்தில் உள்ளவா்களுக்கு ரூ.98 ஆயிரத்துக்குள்ளும் இருக்க வேண்டும். திட்டம் 2இன் கீழ் ஆண்டு வருவாய் ரூ.8 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும்.
தனிநபா் கடன் திட்டத்தில் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.20 லட்சமும், திட்டம் 2இன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
கைவினைக் கலைஞா்களுக்கான கடனுதவித் திட்டத்தில் ஆண்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழு கடன் ஒருவருக்கு ரூ.1 லட்சம், 7 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவா்களுக்கு இளநிலை, முதுநிலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி படிப்பவா்களுக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை 3 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
எனவே, கோவை மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் சமண பிரிவுகளைச் சோ்ந்த சிறுபான்மையினா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் சாா்ந்துள்ள மதத்துக்கான சான்று, ஆதாா் எண், வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனங்களுக்கு கடன் பெறுவதாக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை இணைக்க வேண்டும்.
கல்விக் கடன் பெறுவதற்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேலும் இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0422-2300404 என்ற எண்ணிலும், மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.