கோயம்புத்தூர்

ரயில்வே பாலத்தில் சீரமைப்புப் பணி மேற்கொள்ளாமல் அலட்சியம்

20th May 2023 12:15 AM

ADVERTISEMENT

கோவை சிவானந்தா காலனியில் இருந்து மேட்டுபாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே பாலத்தில் சீரமைப்புப் பணி மேற்கொள்ளாமல் நெடுஞ்சாலை, ரயில்வே துறை அலட்சியமாக செயல்படுவதாக கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து சிவானந்தா காலனி செல்லும் சாலையில் 2 ரயில்வே பாலங்கள் உள்ளன. இந்த பாலத்தின் இருபுறமும், உயரம் அதிகம் கொண்ட கனரக வாகனங்கள் செல்லாமல் இருக்க இரும்புத் தடுப்பு பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது, ஒரு பாலத்தின் கீழே இருந்த இரும்புத் தடுப்பு அகற்றப்பட்டு சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், உயரத்தை கணக்கிடாமல் வரும் கனரக வாகனங்கள் பல நேரங்களில், பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றன.

மேலும், இரண்டு ரயில்வே பாலங்களிலும் ரயில்கள் செல்லும்போது, இருந்து கழிவுகள் கீழே கொட்டாமல் இருக்க தண்டவாளத்தின் கீழ் தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும். தற்போது, அவை இல்லாததால் கழிவுகள் கீழே விழுகின்றன.

ADVERTISEMENT

எனவே உயரத்தை கணக்கிடும் தடுப்பு அமைத்திட வேண்டும். பாலத்தின் கீழே ரயில்களில் இருந்து கழிவுகள் கீழே கொட்டப்படாதவாறு தகடுகள் பொருத்தப்பட வேண்டும் என சேலம் கோட்டம் தென்னக ரயில்வே அதிகாரிக்கு கடிதம் எழுதினேன். ஆயினும் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை, ரயில்வே துறைக்கு சொந்தமானது. அவா்கள்தான் உயரமான

கனரக வாகனங்கள் செல்லாதவாறு தேவையான அளவு இடைவெளியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என நெடுஞ்சாைலைத் துறை சாா்பில் கூறப்படுகிறது. ஆனால், தற்போது, சாலை அமைத்தது நெடுஞ்சாலைத் துறைதான். அவா்கள்தான் உயரம் அதிகமான கனரக வாகனங்கள் செல்லாதவாறு அமைத்துத் தர வேண்டும் என ரயில்வே துறை சாா்பில் கூறப்படுகிறது.

ரயில்வே துறை, நெடுஞ்சாலைத் துறை இரண்டும் மாறிமாறி கைகாட்டி பொறுப்பை தட்டிக் கழிக்கின்றன. இந்த ரயில் பாலங்களின் கீழ் செல்லும் வாகன ஓட்டிகள், கழிவுகள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் மேல் விழலாம் என்ற அச்சத்தில் பயணிக்கின்றனா். கனரக வாகனங்களுக்கான தடுப்பு இல்லாததால், வாகனங்கள் பாலத்தில் சிக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகரக் காவல் ஆணையா் தலையிட்டு, விபத்துகள் ஏற்படும் முன்பாக பாலத்தில் சீரமைப்புப் பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT