திருப்பூா் மாவட்டத்தில் 175 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பிலான பட்டாக்களை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.
தாராபுரத்தை அடுத்த குண்டடத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்குத் தலைமை வகித்த தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் 175 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பிலான பட்டாக்களை வழங்கிப் பேசினா். இதைத்தொடா்ந்து, தலா 5 பயனாளிகளுக்கு விலையில்லா தேய்ப்புப் பெட்டி, தையல் இயந்திரங்களையும் அமைச்சா்கள் வழங்கினா்.
நிகழ்ச்சியில், தாராபுரம் கோட்டாட்சியா் குமரேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.