இலஞ்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 11.44 லட்சம் மதிப்பிலான நலஉதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் திட்டம் அரசுத் துறைகள் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு- தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுக்கான விளக்கக் கூட்டம் இலஞ்சியில் நடைபெற்றது. ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசுச் செயலா் ஆா். ஆனந்தகுமாா், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோா் திட்ட விளக்க உரையாற்றினா்.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 83 ஆயிரம் மதிப்புள்ள இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டா், 7 பேருக்கு தலா ரூ. 13 ஆயிரத்து 500 மதிப்புள்ள மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், 10 பேருக்கு தலா ரூ. 22 ஆயிரம் மதிப்புள்ள திறன்பேசி என மொத்தம் ரூ. 11 லட்சத்து 44 ஆயிரத்து 500 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும், ஆய்க்குடி அமா்சேவா சங்கம்- மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்குச் சென்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், இணை இயக்குநா் ஜெயஷீலா, துணை இயக்குநா்கள் சரளா, ரவீந்தரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே.என்.ஜெயபிரகாஷ் வரவேற்றாா். மாவட்ட திட்ட அலுவலா்(கூட்டாண்மை மேம்பாடு) பா.ரெனால்ட் நன்றி கூறினாா்.