சங்கரன்கோவிலில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ஐம்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சாதனைப் பெண்களுக்கு பாராட்டு, ஊக்கத்தொகை வழங்குதல், அரசு தோ்வுப் பயிற்சி மையங்களுக்கு புத்தகங்கள் வழங்குதல், வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில் வீரா்-வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு, மு.கருணாநிதியின் 100ஆவது பிறந்த நாளையொட்டி மகளிருக்கு தலைக் கவசம் வழங்குதல், மகளிரணிக்கு புதிய உறுப்பினா்களைச் சோ்த்தல் ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது.
வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, மாநில வா்த்தக அணி இணைச் செயலா் முத்துச்செல்வி, மாநில மகளிரணி துணைச் செயலா் விஜிலா சத்யானந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் பங்கேற்று திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. பேசும்போது, பிரிவினைவாத, மதவாத சக்திகளுக்கு எதிராக நாம் மிகப்பெரிய அளவில் அணி திரள வேண்டும். வரும் மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் அனைத்து இடங்களையும் நாம் வென்றெடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, மாணவா்கள், பெண்களுக்கு ஊக்கத் தொகை, 1,000 பேருக்கு தலைக்கவசங்கள், பயிற்சி மையத்துக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினாா்.
திமுக நகரச் செயலா் பிரகாஷ், துணைச் செயலா்கள், பா. முத்துக்குமாா், மாரியப்பன், மாவட்ட துணைச் செயலா் புனிதா, ராஜதுரை, மனோகரன் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.