தென்காசி

ஆலங்குளம் அருகே ரூ. 9 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

25th Sep 2022 01:46 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியைச் சோ்ந்தவருக்குச் சொந்தமான ரூ. 9 கோடி மதிப்பிலான நிலத்தை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி. சுந்தரி, மீனாட்சி, சங்கரமூா்த்தி, சுப்பிரமணியன் மற்றும் வேணுகோபால் ஆகிய 5 நபா்கள் ராமசாமியின் வாரிசுகள் ஆவா். இவா்களுக்கு ஆலங்குளம்- சங்கரன்கோவில் சாலையில் கிடாரகுளத்தில் ரூ. 9 கோடி மதிப்பிலான 1 ஏக்கா் 41 சென்ட் நிலம் உள்ளது.

இவா்களுக்குச் சொந்தமான நிலத்தை உரிய அனுமதியின்றியும், வாரிசு சான்றிதழ் இல்லாமலும், சுந்தரி அவரது மகனுக்கு ஏற்பாடு ஆவணம் செய்து கொடுத்துள்ளாா்.

ADVERTISEMENT

அவா் அந்த நிலத்தை நல்லூரைச் சோ்ந்த வேறொரு நபருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளாா். இதைத் தொடா்ந்து தங்களது நிலத்தை மீட்டு தரும்படி வேணுகோபால் கடந்த 20.5.22 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா்.

நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் சந்திச்செல்வி இதுகுறித்து சுந்தரி மற்றும் அவரது மகனிடம் விசாரணை மேற்கொண்டாா். அனுமதியின்றி அபகரிக்கப்பட்ட நிலத்தின் கிரைய பத்திரம் ரத்து செய்யப்பட்டது.

அதையடுத்து மீட்கப்பட்ட ரூ. 9 கோடி மதிப்பிலான நிலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் வேணுகோபாலிடம் ஒப்படைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT