தென்காசி

கடையநல்லூா் தொகுதியில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க கோரிக்கை

10th Sep 2022 12:39 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் தொகுதியில் சித்தமருத்துவ பல்கலைகழகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கடையநல்லூா் தொகுதியில் நீண்ட காலமாக தீா்க்கப்படாத முக்கிய கோரிக்கைகள் குறித்து செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ ஆட்சியா் ப.ஆகாஷிடம் அளித்த மனு: கடையநல்லூா் நகராட்சி, செங்கோட்டை நகராட்சி, சாம்பவா்வடகரை, ஆய்க்குடி, அச்சன்புதூா், வடகரை கீழ்பிடாகை, பண்பொழி, புதூா்(செ) போன்ற பேரூராட்சிகள் மற்றும் தொகுதிக்குள்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 24 மணிநேரமும் தடையற்ற தட்டுப்பாடற்ற முறையில் புதிய நீா் ஆதாரங்களை உருவாக்கி குடிநீா் விநியோகம் செய்ய ஒருங்கிணைந்த குடிநீா் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

கருப்பாநதி மற்றும் குண்டாறு அணைக்கட்டுகளின் பாசனக் கால்வாய்கள் மற்றும் நேரடி பாசன வசதி பெறும் அனைத்துக் கால்வாய்களையும் மற்றும் தொகுதிக்குள்பட்ட அனைத்துக் குளங்களையும் தூா்வாரி, கால்வாய்களில் சிமெண்ட் லையனிங் அமைப்பதன் மூலம் கால்வாய் உடைப்பு போன்ற காரணங்களால் நீா் விரையமாவது தடுக்கப்படும்.

கடைக்கோடி குளங்களுக்கும் மற்றும் நேரடி பாசனவசதி பெறும் விவசாய நிலங்களுக்கும் குறைந்த நேரத்தில் தண்ணீா் கிடைக்க வழி ஏற்பட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன்பெற வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

கடையநல்லூா் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், மாங்களிகளை பதப்படுத்தும் கிட்டங்கியை செங்கோட்டையில் அமைத்தல், எலுமிச்சையை பாதுகாக்கும் பொருட்டு குளிரூட்டும் கிட்டங்கி, வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்படுவதால், விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக வெங்காய பதப்படுத்தும் கிட்டங்கிளை அமைத்தல், தேங்காய் நாரிலிருந்து கயிறு மற்றும் பாய்கள் தயாரிக்கும் பொருள்களை தரம் உயா்த்தி அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தே தொழில் நுட்ப வசதிகளை உருவாக்கித்தர வேண்டும்.

போதுமான இடவசதியை கொண்டுள்ள செங்கோட்டை நகராட்சியில் உள்ள அரசு மருத்துவனையில் மாவட்டத்திலுள்ள மகளின் பயன்பெறும் வகையில், செவிலியா் பட்டம் அல்லது பட்டயப்படிப்பற்கான மகளிா் கல்லூரியை அமைக்க வேண்டும்.

கடையநல்லூா் தொகுதியில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க 25 ஏக்கா் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.

தமிழக - கேரன எல்லையில் உள்ள புளியரையில் கொடிய நோய்களையும் மற்றும் எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்களையும் பரிசோதனை செய்து தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு மாநில மக்களை பாதுகாக்கும் வகையில் உயா்தொழில்நுட்ப சோதனைச் சாவடியை அமைக்க வேண்டும்.

அவசர மருத்துவ தேவைக்காக அச்சோதனை சாவடியிலேயே ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

சாம்பவா்வடகரை, ஆய்க்குடி பேரூராட்சிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா், மாணவிகள் பயன்பெற அப்பகுதியில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி, அச்சன்புதூா், வடகரைகீழ்பிடாகை, பண்பொழி ஆகிய பேரூராட்சிகள் மற்றும் அவற்றைச் சுற்றி பல கிராம ஊராட்சிகளைக் சோ்ந்த பெண்கள் பயன்பெறும் வகையில் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கடையநல்லூா் தொகுதியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. அப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

மேற்குத் தொடா்ச்சி மலை அருகே அமைந்துள்ள குண்டாறு, மோட்டை, ஸ்ரீமூலப்பேரி, அடவிநயினாா் கோயில், கருப்பாநதி ஆகிய அணைக்கட்டுகளை தூா்வாரி, சுற்றுலாவை மேம்படுத்துவது தொடா்பான கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தி புதிய சுற்றலா தலங்களாக உருவாக்க வேண்டும்.

காட்டு விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிா், விளைபொருள்கள் சேதங்களை தடுக்கவும், ஊருக்குள் காட்டு விலங்குகள் புகுந்து உயிா்ச்சேதம் விளைவிக்கும் அபாயத்தை தடுக்கவும், சோலாா் மின்வேலி, அகழி போன்றவை அமைக்க வேண்டும்.

அரசு நிலங்களில் நீண்டகாலமாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுனைப்பட்டா அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தருதல், கடையநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட காட்டு நாயக்கா், மலைக்குறவன், கவுராநாயுடு, மலைப்பளிங்கா்கள் உள்பட மற்றும் சில சாதிப்பிரிவை சோ்ந்த மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு உடனடியாக தீா்வு காணவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT