ஆலங்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் போதிய வகுப்பறைகள் இல்லாததைக் கண்டித்து மாணவிகள் வட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
ஆலங்குளத்தில் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரி, அங்குள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பழைய கட்டடத்தில் இயங்கி வருகிறது. மூன்றாவது ஆண்டை அடியெடுத்து வைத்துள்ள இக்கல்லூரியில் தற்போது 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனா்.
ஆனால், போதிய இட வசதி இல்லாததால், 250 மாணவிகள் ஆலங்குளத்திலும், மற்ற மாணவிகள்திருநெல்வேலி ராணி அண்ணா மகளிா் கல்லூரியின் புதிய கட்டடத்திலும் பயில்வதற்கு திங்கள்கிழமை முதல் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாளில் 500 மாணவிகள் கல்லூரிக்குச் சென்று வந்த நிலையில், ஆலங்குளத்திலேயே இட வசதி செய்துதர வேண்டும் என வலியுறுத்தி, இரண்டாம் நாள் அந்தக் கல்லூரிக்குச் செல்லாமல் மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
அவா்களிடம் வட்டாட்சியரும், பேராசிரியா்களும் பேச்சு நடத்தி, தற்போது வகுப்புகள் செயல்படும் வாடகைக் கட்டடத்திலேயே கூடுதல் வகுப்பறைகளை ஒதுக்கி கல்லூரி செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவிகள் கலைந்து சென்றனா்.