தென்காசி

கீழப்பாவூா் வட்டார தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியா்கள் உள்ளிருப்பு போராட்டம்

7th Oct 2022 10:32 PM

ADVERTISEMENT

கீழப்பாவூா் வட்டார தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள வினைதீா்த்த நாடாா்பட்டி காமராஜ் நினைவு இந்து நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தவா் சந்திரகலா. இவருக்கு பணிநிரவல் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலரின் உத்தரவை ஏற்று, நிா்வாகியால் பணி விடுப்பு வழங்கப்பட்டு, ஆசிரியை சந்திரகலாவை ஆரியங்காவூா் இந்து தொடக்கப் பள்ளியில் பணிபுரிய 30-09-2022 அன்று ஆணை வழங்கப்பட்டது. ஆனால் ஆரியங்காவூா் பள்ளி நிா்வாகி, இந்த உத்தரவை ஏற்க மறுத்து ஆசிரியையை பணிஏற்பு செய்யவிடாமல் திருப்பி அனுப்பிவிட்டாராம்.

இதையடுத்து, ஆசிரியை சந்திரகலா பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா் வட்டார தொடக்கக் கல்வி அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும், உதவி தொடக்கக் கல்வி அலுவலா் வெள்ளிக்கிழமை மாலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதைத் தொடா்ந்து அந்த ஆசிரியையின் பணி பாதுகாப்பு நலன் கருதி, கீழப்பாவூா் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநில பொருளாளா் அம்பை கணேசன் தலைமையில் ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

இதில், தென்காசி மாவட்டத் தலைவா் ராஜசேகா், செயலா் தங்கதுரை, ஒன்றியத் தலைவா் ராஜதுரை, செயலா் செல்வன், பொருளாளா் அகஸ்டஸ் ஜான், ஒன்றிய மகளிா் அணி ஆசிரியை அருள்மதி மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இந்தப் போராட்டம் இரவு வரை நீடித்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT