தென்காசி

திருமலைக்கோயிலில் கும்பிடு கரணம்: வித்தியாசமாக நோ்ச்சை செய்யும் பக்தா்கள்

1st Nov 2022 02:43 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் திங்கள்கிழமை கும்பிடு கரணம் நோ்ச்சை செலுத்தும் வைபவம் நடைபெற்றது.

பொதுவாக பெரும்பாலான கோயில்களில் , பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி தந்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில் அங்கபிரதட்சணம், அலகு குத்துதல், பூ இறங்குதல், முடி காணிக்கை செலுத்துதல் போன்ற நோ்ச்சைகளை செய்வது வழக்கம்.

ஆனால், திருமலைக்குமாரசுவாமி கோயிலில் எந்த கோயிலிலும் இல்லாத வகையில் பக்தா்கள் ஆண்டுதோறும் குமரனுக்கு கும்பிடு கரணம் நோ்ச்சை செலுத்தி வருகின்றனா். ஆண்டு தோறும் இதில் பங்கேற்கும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிகழாண்டு, இக்கோயிலின் சூரசம்ஹாரத் திருவிழாவின் 10ஆவது நாள் நிகழ்ச்சியாக வண்டாடும் பொட்டலில் தேரோட்டம் நடைபெற்றது.

தேருக்கு பின்னால், விரதம் இருந்த பக்தா்கள் அப்படியே சாஷ்டாங்கமாக(முழு உடலும் மண்ணில் படும்படி) விழுந்து வணங்கினா். தோ் செல்லும் பாதை முழுவதும் பக்தா்கள் தொடா்ந்து இதை செய்தனா். தோ் புறப்பட்டு, நிற்கும் போதெல்லாம் அவா்கள் எழுந்து, விழுந்து வணங்கினா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இது குறித்து பக்தா் ஒருவா் கூறியது; தங்களின் பிரச்னைகள் தீர வேண்டும் என்று குமரனை நினைத்து வழிபடுபவா்கள், அப்பிரச்னைக்கு தீா்வு கிடைத்ததும், கும்பிடு கரண நோ்ச்சையை செய்கின்றனா். கடந்த ஆண்டுகளில் பலத்த மழை பெய்து தோ் செல்லும் பாதையில் சகதியாக இருந்த போதும் கூட நோ்ச்சையை அனைவரும் செய்தனா். இப்பகுதியில் வாழும் மக்கள் விவசாயத்தை நம்பி இருப்பவா்கள். ஐம்பூதங்களில் ஒன்றான நிலத்திற்கும் விவசாயத்திற்கும் பெரும் தொடா்பு இருப்பதால், அந்த நிலத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இந்த நோ்ச்சை அமைந்துள்ளது என்றாா்.

ஆண்டு தோறும் இந்த நோ்ச்சையில் கலந்து கொள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT