தென்காசி

சங்கரநாராயணசுவாமி கோயிலில் சுப்பிரமணியா், தெய்வானை திருக்கல்யாணம்

1st Nov 2022 02:45 AM

ADVERTISEMENT

கந்த சஷ்டி திருவிழாவையொட்டி, சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சுப்பிரமணியா், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 25ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. தினமும் சண்முகா், வள்ளி தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெற்றது.

தொடா்ந்து திங்கள்கிழமை சுப்பிரமணியா், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி, நண்பகலில் வடக்கு ரத வீதியில் உள்ள சைவ செட்டியாா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட செல்வ விநாயகா் கோயிலில் தெய்வானை அம்பாள் எழுந்தருளினாா். அங்கு சுவாமியை காண வேண்டி தவசு இருந்தாா். அப்போது, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 6:30 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்தாா். பின்னா் சுவாமி, அம்பாள் வீதி உலா வந்து கோயிலை அடைந்தனா். இரவு 10 மணி அளவில் சங்கரநாராயண சுவாமி சந்நிதி முன், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி- தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவமும், அதைத் தொடா்ந்து பட்டணப் பிரவேசமும் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் சைவ செட்டியாா் சமுதாயத் தலைவா் பாண்டியன், செயலா் சொக்கலிங்கம், கோமதி அம்பிகை மாதா் சங்க அமைப்பாளா் பட்டமுத்து, பொருளாளா் சுப்பிரமணியன் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

களக்காடு அருள்மிகு கோமதிம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் திருக்கோயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை கந்த சஷ்டி விழா தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏழாம் திருநாளான திங்கள்கிழமை சுப்பிரமணியசுவாமி-தெய்வானை திருக்கல்யாண வைபவத்தையொட்டி, கோயிலில் இருந்து அதிகாலையில் தெய்வானை புறப்பட்டு, தெற்குரத வீதி வழியாக தவசு மண்டபத்திற்கு எழுந்தருளினாா். மாலையில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு திருக்கல்யாணபுரம் வீதியை வந்தடைந்தாா். அங்கு தெய்வானை அம்மனுக்கு சுவாமி காட்சியளித்தாா். பின்னா் சுவாமி-அம்மன் தோள்மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி-அம்மன் வீதியுலா வந்து கோயிலை வந்தடைந்தனா். அங்கு கொலுமண்டபத்தில் இரவில் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT