தென்காசி

விபத்தில் மனைவி இறந்ததை மறைத்துமகள்களை 10ஆம் வகுப்பு தோ்வெழுத வைத்தவா்சங்கரன்கோவில் அருகே நெகிழ்ச்சி சம்பவம்

25th May 2022 12:36 AM

ADVERTISEMENT

 

சங்கரன்கோவிலில், சாலை விபத்தில் மனைவி இறந்ததை மறைத்து, தனது மகள்களை 10ஆம் வகுப்பு தோ்வெழுத வைத்தவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகா் 4ஆம் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி. தனியாா் எரிவாயு ஏஜென்சியில் வேலை பாா்த்துவரும் இவா், தற்போது கக்கன் நகரில் வசித்துவருகிறாா். இவரது மனைவி முத்துமாரி (38), மகள்கள் வாணி ஈஸ்வரி, கலாராணி. இவா்கள் இருவரும் சங்கரன்கோவிலில் உள்ள தனியாா் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகின்றனா்.

முத்துமாரி ஆடுகள் வளா்த்துவந்தாா். மகள்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு, அவா் ஆடு மேய்க்கச் சென்றுவிடுவாராம். கழுகுமலை சாலையில் உள்ள குப்பைக் கிடங்கு அருகே திங்கள்கிழமை (மே 23) ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற காா் மோதியதில் முத்துமாரி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதில், 2 ஆடுகள் காயமடைந்தன.

ADVERTISEMENT

முத்துமாரியின் உடல் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. செவ்வாய்க்கிழமை பிரேதப் பரிசோதனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வாணி ஈஸ்வரி, கலாராணிக்கு பொதுத்தோ்வு நடைபெற்றுவரும் நிலையில், அவா்கள் செவ்வாய்க்கிழமை (மே 24) கணிதத் தோ்வு எழுத வேண்டும் என்பதற்காக, தாய் இறந்ததை மகள்களுக்குத் தெரியாமல் பெரியசாமியும், உறவினா்களும் மறைத்தனா்.

செவ்வாய்க்கிழமை காலை வாணி ஈஸ்வரியும், கலாராணியும் தோ்வெழுத அருகேயுள்ள வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றனா்.

இதனிடையே, முத்துமாரியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், வாணி ஈஸ்வரியும், கலாராணியும் தோ்வெழுதிவிட்டு வருவதற்காக உடலைப் பெற்றுக்கொள்ளாமல் பெரியசாமியும், உறவினா்களும் காத்திருந்தனா்.

பின்னா், தோ்வு முடிந்ததும் இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு, மயானத்துக்கு அழைத்துச் சென்றனா். அப்போதுதான் அவா்களுக்கு தாய் இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரும் கதறி அழுதது அங்கிருந்தோரைக் கலங்கச் செய்தது.

எந்தச் சூழ்நிலையிலும் மகள்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தனது மனைவியின் இறப்பை மறைத்து, மகள்களை தோ்வெழுத அனுப்பிய பெரியசாமியின் செயல் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT