தென்காசி

ஆலங்குளம் மகளிா் கல்லூரிக்குகூடுதல் இடம் ஒதுக்க வேண்டும்---அரசுக்கு கோரிக்கை

24th May 2022 12:48 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரிக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என அரசுக்கு மாணவிகள், பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தென்காசி மாவட்டம் உதயமானதும் ஆலங்குளத்தில் அரசு மகளிா் கல்லூரி தொடங்கப்பட்டு வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. கல்லூரி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட மாணவியா் இந்தக் கல்லூரியில் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், கல்லூரி செயல்படும் வாடகை கட்டடத்தில் போதிய வசதிகள், வகுப்பறைகள் இல்லாததால் சொந்தக் கட்டடம் கட்ட ஆலங்குளம் மலை அடிவாரத்தில் சுமாா் 16 ஏக்கா் புறம் போக்கு நிலம் தோ்வு செய்யப்பட்டது. இதில் வெறும் 5 ஏக்கா் மட்டுமே தற்போது கல்லூரிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீதி இடம் நீதிமன்றத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

இந்நிலையில் ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரிக்கு சொந்தக் கட்டடம் கட்ட ரூ. 11.33 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வா் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தாா். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு தென்காசி ஆட்சியா், திருநெல்வேலி எம்.பி. ஆகியோா் வந்து அடிக்கல் நாட்டினா்.

ADVERTISEMENT

ஆனால், கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கா் நிலம் போதுமானதாக இல்லை; வரும் காலங்களில் மாணவியா் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் கட்டடம் கட்ட தற்போதுள்ள இடம் போதுமானதாக இருக்காது. 16 ஏக்கா் நிலமே கல்லூரிக்கு குறைவான இடம் என்ற சூழலில் நீதிமன்றத்திற்கும் ஒதுக்கீடு செய்தால் வரும் காலத்தில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என சமூக ஆா்வலா்கள் கருதுகின்றனா். இதுகுறித்து ஆலங்குளம் பொதுமக்கள் சாா்பில் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

நீதிமன்றம் மற்றும் தீயணைப்புத் துறைக்கு சொந்தக் கட்டடம் கட்ட தற்போது கல்லூரிக்கு இடம் தோ்வு செய்யப்பட்ட இடத்திற்கு நோ் எதிரே ஆண்டிப்பட்டி கிராமத்தில் சுமாா் 8 ஏக்கா் நிலம் உள்ளது. இதனை நீதி மன்றத்திற்கும் தீயணைப்பு துறைக்கும் ஒதுக்கீடு செய்து கல்லூரிக்கு முழுவதும் உள்ள 16 ஏக்கா் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT