தென்காசி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ஓராண்டில் ரூ. 475.35 கோடி கடனுதவி’

8th May 2022 12:00 AM

ADVERTISEMENT

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தென்காசி மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 475.35 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக, ஆட்சியா் தெரிவித்தாா்.

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி தமிழ்நாடு அரசின் ஓயா உழைப்பின் ஓராண்டு என்ற சாதனை மலரை ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் சனிக்கிழமை வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன் பெற்றுக்கொண்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:

இம்மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மக்களின் மனுக்களுக்கு தீா்வு காணும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமான முதல்வரின் முகவரி திட்டத்தில் 486 பேருக்கு ரூ. 24.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் ரூ. 12.99 கோடியில் 1,823 பேருக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட 9,45,823 பேருக்கு முதல் தவணை, 8,02,408 பேருக்கு 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நோய் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட 11,033 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் 322 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் 1,701 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ரூ. 39.33 லட்சம் மதிப்பில் வேளாண் உபகரணத் தொகுப்புகள், 10,115 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவியாக ரூ. 475.35 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 41,980 மாணவா்-மாணவிகளும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 92,218 பேரும், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் 19,599 பேரும் பயனடைந்துள்ளனா்.

சமூக நல்லிணக்கத்துடன் வாழும் சிறந்த கிராமங்களாக பெரியபிள்ளைவலசை, அத்திப்பட்டி தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகையாக தலா ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. முதல்வா் அறிவித்த அனைத்து நலத்திட்டங்களின் பயன்களும் உரியவா்களைச் சென்றடையும் வகையில் சிறப்பு கவனத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டஇயக்குநா் சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துமாதவன், வருவாய்க் கோட்டாட்சியா்(தென்காசி), கெங்காதேவி, மகளிா் திட்ட இயக்குநா் குருநாதன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT