தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீா்நாள் கூட்டம் ,ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பி.ஆகாஷ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் இலவச செயற்கை கால் வேண்டி விண்ணப்பித்த சங்கரன்கோவில் வட்டம் பருவக்குடி கிராமத்தைச் சாா்ந்த கண்ணன் என்பவருக்கு செயற்கை காலினை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
அரசு விரைவு போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்க பொதுச் செயலா் சக்கரபாண்டி, நிா்வாகிகள் வின்சென்ட், சீதாராமன், ஓய்வுபெற்றோா் சங்க நிா்வாகி செளந்திரபாண்டியன் ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு.
அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு, 79 மாத நிலுவைத்தொகை, குடும்பநல நிதி வழங்கிட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
முகாம் முடிவில் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 482 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த க்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரா்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பிளஸ்2 தோ்வில் 95.25 சத மாணவா், மாணவிகள் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். 12ஆம் வகுப்பு தோ்வில் தோ்ச்சிப்பெற்ற அனைத்து மாணவா், மாணவிகளுக்கும் வாழ்த்துகள் என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்து மாதவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜெய பிரகாஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.