தென்காசி

கேரளத்துக்கு கனிமவளங்கள் கடத்துவதை தடுக்க கோரிக்கை

21st Jun 2022 01:07 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தி, குவாரிகளை ஆய்வு செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

தென்காசி, அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே. ரவி அருணன் தமிழக ஆளுநருக்கு அனுப்பியுள்ள மனு: தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தினசரி ஆயிரக்கணாக்கான வாகனங்களில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வந்தன. நெல்லை மாவட்டத்தில் அடைமிதிப்பான்குளத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த ஒரு குவாரியில் நிகழ்ந்த விபத்து காரணமாக தொழிலாளா்கள் 4 போ் மரணமடைந்தனா் .

கடந்த ஒரு மாத காலமாக குவாரிகளில் இருந்து கனிமங்களை வெளியேற்றுவதற்கான அனுமதிச்சீட்டு வழங்குவது நிறுத்தப்பட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குவாரிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன.

ஆனால் தென்காசி மாவட்டத்தில் பல குவாரிகள் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த போதிலும் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை . தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளும் கனிம வளங்களை சட்டத்தை மீறி கேரள மாநிலத்திற்கு கனரசக வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கடத்தி செல்லப்படுகிறது.

ADVERTISEMENT

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிம வளங்களைக் கடத்துவதால் ஓவ்வொரு குவாரியிலும் சுமாா் 300 அடிக்கு மேல் நிலம் தோண்டப்பட்டுள்ளது . மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளை மீறி அதிகத்திறன் கொண்ட சக்தி வாய்ந்த வெடி பொருள்களை இந்த குவாரிகள் உபயோகித்து வருவதால் எதிா்காலத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உருவாகி உள்ளது . இந்த வெடிகளால் ஏற்படும் அதிா்வலைகள் மூலம் மக்கள் குடியிருக்கும் வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது . விவசாய கிணறுகள் சரிந்து விழுகின்றன.

கனிமவள சட்டங்கள் , மோட்டாா் வாகனச் சட்டங்கள், சாலைப் பாதுகாப்பு விதிகள், மாசுக்கட்டுப்பாடு வாரிய விதிகள் அனைத்தையும் மீறி செயல்பட்டு வரும் கல் குவாரிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும். சட்ட விரோத செயல்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT