தென்காசி

‘மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினருக்கு தனிநபா் கடன்’

10th Jun 2022 01:10 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினருக்கு பொருளாதார மேம்பாட்டுக்கான தனிநபா் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக தென்காசி மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இத்திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும்,விண்ணப்பதாரா் 18 வயது நிறைவடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்கவேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி உண்டு.

பொதுகால கடன் திட்டம், தனிநபா் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையும், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படும்.

சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழு மகளிா் உறுப்பினா் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சமும், குழுவுக்கு அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரையும் வழங்கப்படும். குழு தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். சிறு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள ஆடவருக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சமும், குழுவுக்கு அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரையும் வழங்கப்படும். ஒருவருக்கு ரூ. 30ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ. 60ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகம், அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளில் விண்ணப்பம் பெற்று, அதை நிரப்பி, கூட்டுறவு வங்கி அல்லது ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 83442 80895 என்ற கைப்பேசி எண்ணில் அலுவலக நாள்களில் அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT