தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள காசிநாதபுரம் கிராமத்தில் மா்ம காய்ச்சலால் 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.
காசிநாதபுரம் கிராமத்தில் கடந்த 4 வாரங்களாக மக்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டு வருகிாம். மூன்று தினங்களுக்கு முன் சொரிமுத்து என்பவரது மகள் பூமிகா(6) என்ற சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக தென்காசிக்கும், பின்னா் அங்கிருந்து திருநெல்வேலிக்கும் கொண்டுசென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். எனினும், பூமிகா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மேலும், பழனி என்பவரின் மகள் சுப்ரியா(8) என்ற சிறுமியும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்தாா். இரு தினங்களில் இரு சிறுமிகள் காய்ச்சலால் உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
இதைத் தொடா்ந்து, அந்தக் கிராமத்துக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக புதன்கிழமை வந்த சுகாதாரத் துறையினரை மக்கள் தடுத்து நிறுத்தி, கடந்த 4 வாரங்களாக காய்ச்சலால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தாமதமாக வந்தது ஏன் என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இத்தகவலறிந்த மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் தா்மலிங்கம், கொள்ளை நோய் பிரிவு மருத்துவா் தாண்டாயுதபாணி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்தசாரதி, மாவட்ட உதவி மருத்துவா் முகமது இப்ராஹிம், இளநிலை பூச்சியியல் வல்லுநா் பாலாஜி, வட்டார மருத்துவா் ஆறுமுகம், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதாரன், ஆகியோா் கிராமத்திற்கு வந்து, மக்களிடம் பேச்சு நடத்தி இனிமேல் காய்ச்சலால் உயிரிழப்பு நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். மேலும், கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், வாருகால்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தனா்.
இதனிடையே, உயிரிழந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ. 10 லட்சம் நிவாரண உதவி அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.