தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூா் பெரியகுளம் கண்மாய் மீன்பாசி குத்தகை ஏலம் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது.
வாசுதேவநல்லூரில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பெரியகுளம் கண்மாய் உள்ளது. இக்குளத்தின் மீன்பாசி குத்தகை ஏலம் அறிவிக்கப்படாமல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் குத்தகைக்கு விடவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனராம்.
இந்நிலையில், சங்கரன்கோவிலில் உள்ள வாசுதேவநல்லூா் மேல்வைப்பாறு பொதுப்பணித் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஏலம் நடைபெறுவதாக இருந்தது. இதனால், சிலா் வங்கியில் வரைவோலை (டிடி) எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு வந்தனா். அவா்களிடம், ஏலம் விடுவதற்கான தேதியும், வரைவோலை கொடுப்பதற்கான தேதியும் முடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது.
அப்போது அவா்கள், அறிவிப்பு ஏதும் செய்யாமல் எப்படி ஏலம் விட முடியும் என்றும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் குத்தகைக்கு விட முயல்வதாகக் கூறியும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதால், நிா்வாக காரணங்களுக்காக ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக வாசுதேவநல்லூா் மேல்வைப்பாறு உதவிப் பொறியாளா் உத்தரவு பிறப்பித்தாா். அதற்கான கடிதம் அலுவலகத்தில் ஒட்டப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பினரும் கலைந்து சென்றனா்.