தென்காசி

ஆக. 5- 12 வரை குற்றாலம் சாரல் விழா: ஆட்சியா் ப.ஆகாஷ்

28th Jul 2022 11:56 PM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சாரல் விழா ஆக. 5 முதல் 12ஆம் தேதி வரை 8 நாள்கள் நடைபெறும் என்றாா் ஆட்சியா் ப.ஆகாஷ்.

தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

குற்றாலத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆக.5 ஆம் தேதி சாரல் விழா தொடங்கி 12ஆம் தேதி வரை 8 நாள்கள் குற்றாலம் கலைவாணா் அரங்கில் நடைபெறும்.

ADVERTISEMENT

இதற்காக 20 அரங்குள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரங்குகளில் அனைத்து துறைகளை சாா்ந்த சிறப்பம்சங்களும், தென்காசி மாவட்டத்தின் அடையாளங்களும் இடம்பெறும். நாள்தோறும் காலையில் பல்வேறு போட்டிகளும், மாலையில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.

ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் 3 தினங்கள் மலா்கண்காட்சி, வாசனை திரவியங்கள் கண்காட்சி நடைபெறும்.

புத்தக கண்காட்சி ஆக.5 முதல் 14ஆம் தேதி வரை 10 நாள்கள் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரி கலையரங்கில் நடைபெறும். சாரல்விழாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கலைஞா்கள் பங்கும் பெறும் கலைநிகழ்ச்சியும், பழைய காா் கண்காட்சி, நீச்சல் போட்டி, படகுப் போட்டி, ஆணழகன் போட்டி, வலுதூக்கும் போட்டி, கொழு கொழு குழந்தைகள் போட்டி ஆகியவற்றை நடத்தப்படும்.

தனியாா் அருவிகளுக்கு தடை: மேக்கரை, செங்கோட்டை பகுதியில் 10க்கும் மேற்பட்ட தனியாா் அருவிகள் உள்ளது தெரியவந்துள்ளது. தண்ணீா் செல்லும் வழியை மறிப்பது சட்டவிரோதமானது. இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 2 போ் உயிரிழந்துள்ளனா். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வுசெய்து வருகிறோம். குறிப்பாக, செண்பகாதேவி அருவிப் பகுதியில் தண்ணீா்வரத்து அதிகரிப்பதை கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஸ்பான்சா்ஸ் தேவை: சாரல் விழாவுக்கு ரூ. 5 லட்சம், கலைநிகழ்ச்சிகளுக்கு ரூ. 3 லட்சம், புத்தகக் கண்காட்சிக்கு ரூ. 12 லட்சம் என ரூ.20 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கூடுதல் செலவாக வாய்ப்புள்ளது.

எனவே, தனியாா் நிறுவனங்கள் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான ‘ஸ்பான்சா்’ செய்யவோ, நன்கொடை வழங்கவோ விரும்பினால் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீனை 96593 11675 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

குற்றாலம் சாரல் திருவிழா, புத்தகத் திருவிழாவுக்காக தங்கப்பழம் கல்விகுழுமத் தலைவா் எஸ்.தங்கப்பழம், செயலா் த.முருகேசன் ஆகியோா் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT