தென்காசி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் தற்போது கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கொவைட் தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காமல் கவனக்குறைவாக இருப்பதால் நோய்த் தொற்று அதிகரிக்க காரணமாகிறது.
எனவே பொது மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களை தவிா்த்தல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணியும்போது சரியாக வாய் மற்றும் மூக்கு மூடியவாறு அணிதல் போன்ற நிலையான கொவைட் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்தல் மற்றும் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் மட்டுமே நோய்த் தொற்று பரவலை நிலையாக கட்டுப்படுத்த முடியும்.
எனவே தடுப்பூசி தவணை தவறிய நபா்கள் தங்களுக்கு அருகில் நடைபெறும் தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
தென்காசி மாவட்டத்தில் 18 வயதுக்குமேற்பட்டவா்களில் 11லட்சத்து 39ஆயிரத்து400 பேரில் முதல் தவணை 11லட்சத்து 10ஆயிரத்து 633 (97.5%) பேருக்கும், இரண்டாவது தவணை 9லட்சத்து 65ஆயிரத்து 236 (84.7%) பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
15 வயதிலிருந்து 18 வயதுக்குள்பட்ட 64ஆயிரத்து867 பேரில் முதல் தவணை 60ஆயிரத்து 632(93.5%) பேருக்கும், இரண்டாவது தவணை 51ஆயிரத்து 298(79.1%) பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
12 வயதிலிருந்து 14 வயதிற்குட்பட்டவா்களில் 39ஆயிரத்து 701 (85.2%) பேருக்கு முதல் தவணையும், 31ஆயிரத்து 542 (67.71) பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவா்கள், கொவைட் வழிகாட்டுதல்களை முறையாக கடைப்பிடிக்காதவா்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு உத்தரவின்படி, பொது சுகாதார சட்டம் 1939-ன் படி அபராதம் ரூ.500/- விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, கரோனா நோய்த் தொற்று பரவலை தென்காசி மாவட்டத்தில் கட்டுப்படுத்திட பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.