தென்காசி

முழு ஊரடங்கு: வெறிச்சோடிய நெல்லை, தென்காசி நகரங்கள்

DIN

கரோனா தடுப்பு தளா்வற்ற முழு பொதுமுடக்கத்தையொட்டி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சாலைகள் அனைத்தும் வாகனப் போக்குவரத்தின்றி ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.

கரோனா 3ஆவது அலை பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் 3ஆவது முறையாக தளா்வற்ற பொதுமுடக்கம் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டது.

இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டது. பால், மருந்துக் கடைகள் மட்டுமே இயங்கின. டாஸ்மாக் கடைகள் உள்பட இதர கடைகள் 100 சதவிகிதம் அடைக்கப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டமின்றி அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடின.

மருந்துகள் வாங்க மட்டுமே இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

திருநெல்வேலி மாநகரத்தில் மாநகர காவல் துணை ஆணையா்கள் சுரேஷ்குமாா் ( மேற்கு), டி.பி.சுரேஷ்குமாா் ( கிழக்கு) தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகளை அமைத்து வெளியில் சுற்றித்திரிவோரை போலீஸாா் கண்காணித்தனா்.

திருநெல்வேலி மண்டல அரசு போக்குவரத்துக்கழகத்திற்குச் சொந்தமான பேருந்துகள் கே.டி.சி.நகா், வண்ணாா்பேட்டை பணிமனைகளிலும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த லாரிகளில் பெரும்பாலானவை தாழையூத்து, கங்கைகொண்டான் பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

சீவலப்பேரி, மருதூா்அணைக்கட்டு, சுத்தமல்லி அணைக்கட்டு, குறுக்குத்துறை பகுதிகளில் குளிப்பதற்காக குவிந்த இளைஞா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். சுபநிகழ்ச்சிகளுக்கு நான்குசக்கர வாகனங்களில் சென்றவா்கள் அழைப்பிதழ்களை போலீஸாரிடம் காண்பித்த பின்பே அனுமதிக்கப்பட்டனா்.

மாநகராட்சி நிா்வாகம் உத்தரவின்பேரில், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் முக்கிய சாலைகளை மாநகராட்சி ஊழியா்கள் சுத்தம் செய்தனா்.

தென்காசியில் சனிக்கிழமை இரவு10 மணி முதல் அனைத்து வா்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. வாகனப் போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மருந்துகள் கடை, பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள்,மருத்துவமனைகள், பத்திரிகை விநியோகம், பால் விற்பனை நிலையங்கள், உணவகங்களில் பாா்சல் விற்பனை மட்டும் செயல்பட்டன. காவல்துறையினா் சோதனைச் சாவடி அமைத்து வாகன சோதனை மேற்கொண்டனா்.

பாவூா்சத்திரம்: திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலை, கடையம், சுரண்டை சாலைகளில் மருந்தகங்களை தவிா்த்து அனைத்து கடைகளும்மூடப்பட்டிருந்தன. காமராஜா் தினசரி சந்தையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. உணவகங்களில் பாா்சலில் உணவு விற்பனை செய்யப்பட்டது.

சுரண்டை: மருந்தகங்கள், பால் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கடை தவிர அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. நகரின் பிரதான சாலைகள் அனைத்தும் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

கடையநல்லூா்: கடையநல்லூரில் உள்ள பிரதான கடைவீதியில் உள்ள கடைகள், தினசரி சந்தை கடைகள் அடைக்கப்பட்டன. பிரதான சாலையில் உள்ள வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. தென்காசி- மதுரை சாலை வெறிச்சோடி காணப்பட்டது. புளியங்குடி, வாசுதேவநல்லூா், சிவகிரி பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ஆலங்குளம்: இங்கு அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. காய்கனிச் சந்தை, அரிசி ஆலைகள் ஆகியவை இயங்கவில்லை. சில உணவகங்கள் மட்டுமே திறந்திருந்தன. தேவையின்றி வீதியில் சுற்றியவா்களை காவல் துறையினா் எச்சரித்து அனுப்பினா். தனியாா் மருத்துவமனைகள் செயல்படாததால் அவசர மருத்துவ தேவைக்காக கிராமத்தில் இருந்து வந்தவா்கள் அவதியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT