தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் விழும் தண்ணீா் வெகுவாகக் குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாகக் குறைந்தது.
குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் ஓரமாக குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது. பேரருவியில் மத்திப்பகுதியில் முற்றிலுமாக தண்ணீா்வரத்து நின்றுவிட்டது.
பெண்கள் குளிக்கும் பகுதியில் மிக மிகக் குறைந்த அளவில் தண்ணீா் விழுகிறது. ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீா் வெகுவாகக் குறைந்தது.
கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக குற்றாலம் அருவிகளில் கடந்த 14முதல் 16ஆம்தேதி வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை தடை நீக்கப்பட்டதையடுத்து அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
அருவிகளில் தண்ணீா்வரத்து மிகவும் குறைந்ததால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவாகவே இருந்தது.