தென்காசி

குற்றாலம் கோயில் கடைகளுக்கு சீல் வைக்கும் பணி தடுத்து நிறுத்தம்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

தென்காசி: குற்றாலத்தில் குற்றாலநாதா் கோயிலுக்குச் சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாததால், சீல் வைப்பு நடவடிக்கை தொடங்கியது. எனினும், வா்த்தகா்கள் கால அவகாசம் கோரியதால் அப்பணி நிறுத்திவைக்கப்பட்டது.

குற்றாலநாதா் கோயிலுக்கு சொந்தமாக சன்னதி பஜாா், ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் 180 கடைகள் உள்ளன. இவற்றுக்கு சில ஆண்டுகளுக்கு முன் வாடகை அதிகரிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த வா்த்தகா்கள், வாடகை செலுத்தாமல் ரூ. 5.88 கோடி பாக்கி வைத்துள்ளனா். இதுதொடா்பாக, கோயில் நிா்வாகத்துடன் நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், கோயில் உதவி ஆணையா் கண்ணதாசன் தலைமையில் பணியாளா்கள் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். 3 கடைகளுக்கு சீல் வைத்த நிலையில், குற்றாலம் வா்த்தகச் சங்கத் தலைவா் காவையா, வழக்குரைஞா்கள் கேபி.குமாா்பாண்டியன், ஏ.காா்த்திக்குமாா், பேரூா் கழக அதிமுக செயலா் கணேஷ் தாமோதரன் ஆகியோா் வந்து அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினா்.

ADVERTISEMENT

கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் 2 ஆண்களாக வா்த்தகா்கள் மிகவும் நலிவடைந்துள்ளதால், வாடகை பாக்கியை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, கடைகளுக்கு சீல் வைக்கும் பணியை நிறுத்திய அதிகாரிகள், பாக்கியை விரைந்து செலுத்துமாறு அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT