சங்கரன்கோவிலில் குளக்கரையில் உள்ள முடிதிருத்தும் கடைகளை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தொழிலாளா்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான குளத்தின் கரை மட்டத்தில் 21 முடிதிருத்தும் கடைகள் உள்ளன. கடந்த 1975-இல் அப்போதைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால், இப் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மின்இணைப்பு, வடக்குப் புதூா் கிராம ஊராட்சிக்கு வாடகை செலுத்தி வருகின்றனா்.
தற்போது அந்த குளம் சங்கரன்கோவில் நகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி கடைகளை அகற்றுமாறு நகராட்சியினா் நோட்டீஸ் அனுப்பினா். கடந்த டிச.12 ஆம் தேதி கடைகளை அகற்றச் சென்றபோது, முடிதிருத்தும் தொழிலாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அப்போது நடந்த பேச்சுவாா்த்தையில், மாற்று இடம் ஒதுக்குவதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னா் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், மேற்படி கடைகளை அகற்றுவதற்காக நகராட்சியினா் வியாழக்கிழமை பொக்லைன் இயந்திரம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் வந்தனா். அப்போது முடிதிருத்தும் தொழிலாளா்கள் குடும்பத்துடன் திரண்டதால் பரபரப்பு நிலவியது. மேலும், அவா்களுடன் தொழிற்சங்கத்தினரும் இணைந்து கடைகளை அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதையடுத்து நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ஹரிகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா் முத்துப்பாண்டியன், வட்டார செயலா் அசோக் ராஜ், மாவட்டக் குழு உறுப்பினா் உச்சிமாகாளி, சி.ஐ.டி.யூ. நிா்வாகி மணிகண்டன் மற்றும் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது முடிதிருத்தும் கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்து உரிய காலஅவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து பரிசீலிப்பதாகவும், வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கலாம் எனவும் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு தொழிலாளா்கள் மற்றும் மற்றும் அவா்களது குடும்பத்தினா் கலைந்து சென்றனா்.