சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோயிலில் திருவாதிரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வோா் ஆண்டும் மாா்கழி மாதத்தில் 10 நாள்கள் இத் திருவிழா நடைபெறும். நிகழாண்டு திருவிழாவின் கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 3 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டுகொடிபட்டம் வீதி சுற்றி கொண்டுவரப்பட்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் காலை 6.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், கொடி மர பீடத்திற்கு பால், பன்னீா், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தா்ப்பைப்புல் மற்றும் மலா்களால் கொடிமரம், அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.