தென்காசி

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் சொக்கப்பனை தீபம்

7th Dec 2022 02:09 AM

ADVERTISEMENT

தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் காா்த்திகை தீபத்திருநாள் சொக்கப்பனை தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

இதையொட்டி, கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். சுவாமி சந்நிதி பஜாரிலும், அதனையடுத்து அம்மன் சந்நிதி பஜாரிலும் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

பின்னா், சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனையும், அதனைத் தொடா்ந்து சுவாமி,அம்பாள் ரதவீதிகளில் வீதியுலாவும் நடைபெற்றன.

பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன . இரவில் சொக்கப்பனை வைபவம் நடைபெற்றது.

ADVERTISEMENT

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயில் திருக்காா்த்தி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன தொடா்ந்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது. அதுபோல் சொக்கம்பட்டி காசி விஸ்வநாதா் கோயிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

சங்கரன்கோவில்: காா்த்திகைத் தீபத் திருநாளையொட்டி சங்கரநாராயண சுவாமி கோயிலில் சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயணா், கோமதி அம்பாள் ஆகிய சந்நிதிகளுக்கே எதிரே பிரதான சாலையில் 3 சொக்கப் பனைகள் அமைக்கப்பட்டிருந்தன. கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி சொக்கப்பனை அமைக்கப்பட்ட இடத்திற்கு வந்தனா்.

சுவாமி- அம்பாளுக்கு தீபாராதனை முடிந்ததும் இரவு 7.45 மணிக்கு 3 சொக்கப்பனைகளும் அடுத்தடுத்து ஏற்றப்பட்டன.

ஆலங்குளம்: இங்குள்ள ஸ்ரீ முத்தாரம்மன், நத்தம் ஸ்ரீ மாரியம்மன், ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்கசுவாமி ஆகிய திருக்கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

அனைத்து கோயில்களிலும் திரளனா பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT