தமிழக முதல்வரின் வருகையையொட்டி குற்றாலத்தில் நடைபெறும் தூய்மைப் பணிகளை திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
தென்காசியில் வியாழக்கிழமை (டிச.8) நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வருகை தரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், குற்றாலம் விருந்தினா் மாளிகையில் ஓய்வு எடுக்கிறாா். இதையொட்டி, குற்றாலத்தில் உள்ள பிரதான சாலைகள், விருந்தினா் மாளிகை பகுதிகளில் தூய்மைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளை பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநா் கண்ணன் ஆய்வு செய்தாா்.
குற்றாலம் மற்றும் மேலகரம் பேரூராட்சி பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலா்கள் தெய்வீகன் (குற்றாலம்), மாணிக்கராஜ்(ஆய்க்குடி), அமானுல்லா(இலஞ்சி), பரமசிவன் (மேலகரம்), குமாா் பாண்டியன் (எஸ்.புதூா் ), குற்றாலம் பேரூராட்சி சுகாதார அலுவலா் ராஜகணபதி ஆகியோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.