தென்காசி

நலஉதவிகள்: பழங்குடியின மக்கள் கோரிக்கை

3rd Dec 2022 11:54 PM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் தமிழக முதல்வா் பங்கேற்கும் விழாவில் பழங்குடியின மக்களுக்கும் நல உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் தமிழக அரசின் நல உதவிகள் வழங்கும் விழா டிசம்பா் 8 ஆம் தேதி இலத்தூா் அருகேயுள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நல உதவிகளை வழங்கவுள்ளாா். இந்த விழாவில், தங்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து தென்காசி மாவட்ட பழங்குடியின மக்கள் தலைவா் புளியங்குடி க.பாண்டியன் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூா் கருப்பாநதி அணைப் பகுதி கலைமான் நகா், மேற்கு தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளான புளியங்குடி கோட்டைமலையாறு, வாசுதேவநல்லூா் தலையணை ஆகிய பகுதிகளில் சுமாா் 87 பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

பெரும்பாலான நாள்கள் மலைப் பகுதியில் தங்கியிருந்து தேன், கடுக்காய், நெல்லிக்காய், ஈச்சமாா்புல் போன்ற வனப் பொருள்களைச் சேகரித்து விற்பனை செய்வது வழக்கம். தற்போது வனப்பகுதியில் பல்வேறு இடையூறுகளால் அப்பணியையும் முழுமையாகச் செய்ய முடியவில்லை. ஆண்டின் பல மாதங்கள் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகவே இருந்து வருகிறது.

தென்காசியில் தமிழக முதல்வா் பங்கேற்கும் விழாவில், பழங்குடியின மக்களுக்கும் ஆடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT