தென்காசி

இன்று ஆடித்தவசுக் காட்சி: சங்கரன் கோவிலில் குவியும் பக்தா்கள்

10th Aug 2022 01:50 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தவசுக் காட்சி புதன்கிழமை (ஆக.10) மாலை நடைபெறுகிறது.

இத் திருக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா கடந்த 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கோமதிஅம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுக் காட்சி புதன்கிழமை மாலை நடைபெறுகிறது.

முன்னதாக, காலையில் சுவாமி, அம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. திருக்கண் தவசு மண்டபத்தில் பானகம், சிறுபருப்பு, நெய்வேத்தியம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். தொடா்ந்து ஸ்ரீகோமதிஅம்பாளுக்கு அபிஷேக, அலங்காரம் முடிந்ததும் அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

ADVERTISEMENT

இதையடுத்து முற்பகல் 11.40 மணிக்கு அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி தவசு மண்டபத்துக்கு செல்கிறாா். அதே சமயம் சுவாமிக்கு மண்டகப்படி அழைப்புச் சுருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதைத் தொடா்ந்து மாலை 4.30 மணியளவில் சுவாமி கோயிலிலிருந்து புறப்பட்டு, தெற்கு ரதவீதியில் அமைக்கப்பட்டுள்ள தவசுப் பந்தலுக்கு வருகிறாா். சுவாமி வந்ததும், தவசு மண்டபத்தில் உள்ள அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி எதிா்பந்தலுக்கு வருகிறாா். மாலை 5 .30 மணிக்கு மேல் சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சங்கரநாராயணராக அம்பாளுக்கு காட்சிக் கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு காட்சிக் கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT