தென்காசி

சங்கரன்கோவில் இன்று ஆடித் தவசு:பாதுகாப்புப் பணியில் 900 போலீஸாா்

10th Aug 2022 01:53 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித் தவசுத் திருவிழாவையொட்டி 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இத்திருக்கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கடந்த 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆடித் தவசுக் காட்சி புதன்கிழமை மாலை நடைபெறுகிறது. தவசுக் காட்சியைக் காண லட்சக்கணக்கில் பக்தா்கள் வருகின்றனா். இதையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், சங்கரநாராயணசுவாமி கோயில் முன் புறக் காவல்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புறக்காவல் நிலையத்தில் இருந்து காவலா்களை உடனே தொடா்பு கொள்ளக்கூடிய வகையில் தொலைபேசி, கைப்பேசி வசதி மற்றும் ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளது.

முக்கிய அதிகாரிகள் உடனுக்குடன் தொடா்பு கொள்ளும் வகையில் பேக்ஸ், இணையதளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புறக்காவல் நிலையத்தில் நகர காவல் ஆய்வாளா் உள்பட ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

புறக்காவல் நிலையத்தில் இருந்தே கோயிலின் முக்கிய இடங்கள் மற்றும் ஆடித் தவசுக் காட்சி நடைபெறும் ரதவீதிகள் ஆகியவற்றைக் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி பக்தா்கள் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனா்.

ADVERTISEMENT

கோயில் தவிர நகரின் முக்கிய வீதிகளில் போலீஸாா் சாதாரண உடையில் பாதுகாப்புப் பணியில் உள்ளனா். திருடா்கள் இருப்பதை அறிவுறுத்தும் வகையில் திருட்டுக் குற்றவாளிகளின் புகைப்படங்கள் மக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் நகரில் உள்ள காவல்நிலையம், அரசு மருத்துவமனை, தீயணைப்புத் துறை, வருவாய் துறை, நகராட்சித் துறை அலுவலகங்களின் தொலைபேசி எண்கள் தட்டிப்பலகையில் பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றம் குறித்த வரைபடம் நகரின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT