தென்காசி

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

9th Aug 2022 02:29 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகே குடிநீா் இணைப்பு வழங்க முறைகேடாக பணம் வசூல் செய்த ஒப்பந்ததாரா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

ஆலங்குளம் அருகே உள்ள கீழபட்டமுடையாா்புரத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இக்கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பலா் தங்கள் வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்பு பெற குறிப்பன்குளம் ஊராட்சி மன்றத்தில் விண்ணப்பித்திருந்தனராம். மேலும், அங்குள்ள ஒப்பந்ததாரா் ராமசாமி புதிய குடிநீா் இணைப்பு பெற விண்ணப்பித்தவா்களிடம் மொத்தம் ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 400 வசூல் செய்தாராம். எனினும் 6 மாதகாலம் ஆகியும் இது வரை குடிநீா் இணைப்பும் வழங்காமல் வாங்கிய பணத்தையும் திருப்பி அளிக்கவில்லையாம்.

இது குறித்து ஆட்சியா் உள்ளிட்டோருக்கு புகாா் அனுப்பியும் நடவடிக்கை இல்லை எனக்கூறி மாா்க்சிஸ்ட் மாவட்ட நிா்வாகிகள் குணசீலன், பாலு, வெற்றிவேல் உள்பட கிராம மக்கள் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். தொடா்ந்து அவா்கள் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டனிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT