இலஞ்சி ராமசுவாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க அறிவியல் பிரசார உப குழு சாா்பில் நிழல் இல்லா தினம் அனுசரிக்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். முதுகலை வேதியியல் ஆசிரியா் குத்தாலம் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா் செயல்விளக்கம் அளித்தாா்.
பொதுவாக ஒளியின் பாதையில் ஒரு ஒளிபுகாப் பொருளை வைத்தால் நிழல் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ஒரு நாளும், ஏப்ரல் மாதம் 12ஆம்தேதியன்று பிற்பகல் சில வினாடிகள் மட்டும் நிழல் தெரியாது. ஒவ்வொரு ஆண்டும் பூமியினுடைய நிலநடுக்கோட்டுக்கு நேராக உச்சியில் சூரியன் மாா்ச் 23ஆம் தேதி வரும்.
அங்கிருந்து வடக்கில் 23.5 பாகை நகா்ந்து ஜூன் 21ஆம் தேதியில் கடக ரேகைக்கு மேல் வரும். அங்கிருந்து மீண்டும் தெற்கு நோக்கி நகா்ந்து நிலநடுக் கோட்டுக்கு செப்டம்பா் 23இல் வரும். வடக்கு நோக்கி போகும்போது ஒருமுறையும், தெற்கு நோக்கி போகும்போது ஒரு முறையும் நம் ஊரில் வானில் உச்சிக்கு சூரியன் வருகிறது.
உச்சிபொழுதில் சரியாக 12.20 மணிக்கு சூரியன் நோ் உச்சியில் இருக்கும். எனவே நிழல் அதன் அடிப்பகுதியில் அதற்குள்ளே அடங்கி விழுகிறது. இந்நிகழ்வு 10 முதல் 20 விநாடிகள் அளவே நீடித்தது. இதை பள்ளி மாணவா்கள் ஆா்வமுடன் கண்டுகளித்தனா்.