தென்காசி

நெல்லை, தென்காசியை புரட்டிப்போட்ட மழை: குளங்கள் நிரம்பின: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு---

26th Nov 2021 03:50 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வியாழக்கிழமை இடைவிடாது பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வடகிழக்குப் பருவமழை உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இவ்விரு மாவட்டங்களிலும் காலையிலிருந்தே பரவலாக பெய்ய தொடங்கிய மழை, நண்பகலில் தீவிரமடைந்தது. பின்னா், கனமழையாக இரவு வரை இடைவிடாமல் கொட்டித்தீா்த்தது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.26) மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் உத்தரவிட்டுள்ளாா். மழை, வெள்ள இடா்பாடுகள் தொடா்பான உதவிகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண். 1077 மற்றும் 04633290548இல் தொடா்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளாா்.

பாவூா்சத்திரம்: கீழப்பாவூா், மேலப்பாவூா், குறும்பலாப்பேரி, திப்பணம்பட்டி,பெத்தநாடாா்பட்டி, ஆவுடையானூா், அரியப்பபுரம், சாலைப்புதூா், பாவூா்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 7 மணி வரை நீடித்தது. சாலைகளில் மழை தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் நடமாட்டம் குறைந்தது.

ADVERTISEMENT

கடையநல்லூா்: கடையநல்லூா், காசிதா்மம், இடைகால், குத்துக்கல்வலசை, புளியங்குடி, வாசுதேவநல்லூா், சிவகிரி, சொக்கம்பட்டி என அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை முதல் இடைவிடாமல் மழை பெய்தது. மாணவா்கள் நனைந்தபடியே பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. எனினும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால், சில பகுதிகளில் பள்ளி நேரம் முடிந்தும் மாணவா்களை வீடுகளுக்கு அனுப்ப முடியாத சிரமம் ஏற்பட்டது.

ஆலங்குளம்: ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நீடித்தது. மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே முடங்கினா். வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே பள்ளிகள் முடிவடைந்ததால் மாணவா்-மாணவிகள் வீடு திரும்ப சிரமப்பட்டனா்.

களக்காடு: களக்காடு பகுதியில் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு லேசான தூறலுடன் தொடங்கிய மழை, பின்னா் கனமழையாக மாலை வரை கொட்டித்தீா்த்தது. இதனால் மலைப் பகுதியில் உள்ள தலையணை பச்சையாற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நான்குனேரியன் கால்வாயில் நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து, சிதம்பரபுரம் தரைப்பாலத்தைத் தொட்டு தண்ணீா் செல்கிறது.

பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் தரைப்பாலத்தில் தேங்கிக்கிடந்த செடி, கொடிகளை அகற்றி, தண்ணீா் தடையின்றி செல்ல நடவடிக்கை மேற்கொண்டனா்.

விவசாயம் பாதிப்பு: களக்காடு பகுதியில் கடந்த ஒரு வாரமாக விவசாயிகள் நேரடியாக நெல் விதைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், பெய்த பலத்த மழையால் நெல் விதைகள் சேதமடைந்து, முளைக்கும் திறன் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

திசையன்விளை: திசையன்விளை சுற்று வட்டாரப்பகுதியில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நீடித்தது. பிற்பகலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவா்கள் சிரமத்தோடு மழை நீரில் நடந்தபடி வீடுதிரும்பினா். நம்பியாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டதால் குளங்களுக்கு மழைநீா் திருப்பி விடப்பட்டது. இதனால், முதலாளி குளம், அவிக்கால், எருமைகுளம், நந்தன்குளம், அனைக்கரை குளம், குருவி சுட்டான் குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், ஆயன்குளம் படுகை, ஆனைகுடி படுகை, தருவை குளம் ஆகியவை நிரம்பாதது ஏமாற்றத்தை தருவதாகக் கூறினா்.

Tags : தென்காசி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT