தென்காசி

செங்கானூர் கிராம மக்கள் குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி வைக்க முடிவு

25th Jan 2021 08:58 AM

ADVERTISEMENT

கடையம் அருகே உள்ள செங்கனூர் கிராம மக்கள் ரயில் சுரங்கப் பாதைக்கு மாற்றுப் பாதை அமைத்துத் தராததையடுத்து அனைவரும் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டைகளை தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப் போவதாக தீர்மானித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்டது செங்கானூர் கிராமம். இங்கு சுமார் 300 வீடுகளில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இதுவரை அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் ஓடை, பொதுக்கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லை. மேலும் இந்த கிராமத்திற்கு ஆழ்வார்குறிச்சியில் இருந்து வரும் வழியில் ரயில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

இதில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதுகுறித்து 3 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், ரயில்வே அதிகாரிகள் உள்பட அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து அடிப்படை வசதிகள் கோரியும், மாற்றுப்பாதை அமைத்துக்தரக் கோரியும் கிராம மக்கள் தங்களது வாக்காளர் அட்டையை ஆளுநரிடம் ஒப்படைப்பதாக அறிவித்து ஜன. 5-ல் 227 பேர் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி வைத்து தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர். 

அன்று கிராம மக்களிடம் பேச்சு நடத்திய வருவாய்த்துறை, காவல் துறை அதிகாரிகள் ரயில்வே நிர்வாகத்திடம் பேசி ஒரு வாரத்தில் மாற்றுப் பாதை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம மக்கள் மீண்டும் கூடி தங்கள் கிராமம் தொடர்ந்து அரசு அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுவதாகவும், கிராம மக்கள் அகதிகளைப் போல் வாழ்க்கையை வாழ்வதாகவும் கூறி தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டைகளை பிப். 10 அன்று தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளனர்.

ADVERTISEMENT

Tags : tenkasi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT