சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டத்தில் உள்ள 648 நியாய விலைக்கடைகளில் ரூ.117 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2500 வழங்கும் பணியினை அமைச்சர் ராஜலெட்சுமி திங்கள்கிழமை வழங்கித் தொடக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவிருக்கிறது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் முதல் முதலாக பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.2500 வழங்கும் விழா கழுகுமலைசாலையில் உள்ள கக்கன்நகர் நியாயவிலைக் கடையில் நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை வகித்தார்.
சங்கரன்கோவில் கோட்டாட்சியர் முருகசெல்வி,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, வட்டாட்சியர் திருமலைச்செல்வி, குடிமை பொருள் வழங்கல் வட்டாட்சியர் ஓசன்னா, மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் உள்ள 648 நியாயவிலைக் கடைகளில் 4,38,775 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.117 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கித் தொடக்கி வைத்தார்.
இம்மாவட்டத்தில் பச்சரி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு துணிப்பை உள்ளடக்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.7.32 கோடி மதிப்பிலும், மற்றும் ரூ.109.69 கோடி மதிப்பில் ரூ.2500-ம் வழங்கப்படுகிறது.
விழாவில் அதிமுக நகர செயலாளர் ஆறுமுகம், மத்திய கூட்டுறவு வங்கி துணைதலைவர் வேல்சாமி, கூட்டுறவு சங்க தலைவர் பி.ஜி.பி.ராமநாதன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.