தென்காசி

கடையம் அருகே பண்டாரகுளம் நிறைந்ததால் முத்தம்மாள்புரம் துண்டிப்பு

DIN

கடையம் அருகே உள்ள பண்டாரகுளம் நிறைந்து மறுகால் செல்வதால் முத்தம்மாள்புரம் கிராமத்திற்குச் செல்லும் பாதைத் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியம், வெங்காடம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த குக்கிராமம் முத்தம்மாள்புரம். இங்கு சுமார் 60 வீடுகளில் சுமார் 200 தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் அல்லது விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். முத்தம்மாள்புரத்தின் மேற்குப்புறத்தில் உள்ள பண்டாரகுளம் அதிக மழை காலத்தில் நிரம்பி மறுகால் விழுவதுண்டு. மறுகால் செல்லும் தண்ணீர் முத்தம்மாள்புரம் செல்லும் வழியில் உள்ளதால் அதிக அளவில் தண்ணீர் வரும் காலங்களில் கிராம மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. 

கிராமத்தில் உள்ள சிறுவர்கள், மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் மறுகால் ஓடையைக் கடந்து வருவதற்கு மிகவும் சிரமமான நிலை ஏற்படுவதுண்டு. இந்நிலையில் கடந்த பல நாள்களாகப் பெய்து வந்த பலத்த மழையால் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின் நிகழாண்டு பண்டாரகுளம் நிரம்பியது. இதையடுத்து மறுகால் ஓடையில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் ஓடையைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் அதிவேகமாக தண்ணீர் செல்வதால் சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லும் நிலை உள்ளது. 

இதுகுறித்து முத்தம்மாள்புரத்தைச் சேர்ந்த முருகன் கூறியது, பண்டாரகுளம் நிரம்பி ஒவ்வொரு முறை மறுகால் ஓடையில் தண்ணீர் வரும் போதும் அதிகாரிகளிடம் புகாரளித்தால் வந்து பார்வையிட்டு செல்வதோடு சரி. இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதை துண்டிக்கப்படுவதால் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளீல் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்த நிலையில் ஏராளமானவர்கள் மறுகால் ஓடை பிரச்சினையால் ஊரைக் காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். 

இப்பொழுது இங்கு வசிப்பவர்கள் வேறும் எங்கும் சென்று வசிக்க முடியாத நிலையில் இங்கு வசிக்க வேண்டியநிலை உள்ளது. எனவே உடனடியாக தொடர்புடைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலம் அமைக்க வேண்டும் என்றார். இந்நிலையில் பண்டாரகுளம் மறுகால் செல்வதையறிந்த கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர். தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாபன் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT