தென்காசி

கனமழை நீடிப்பு: வெள்ளத்தில் மூழ்கிய ஜம்புநதி தரைப்பாலம்: 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன

DIN

தென்காசி மாவட்டம், கடையத்தில் ஜம்புநதி தரைப்பாலத்தின் ஓடைக் கண்கள் அடைபட்டதால் பாலம் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் போக்குவரத்துக்கு சிரமப்பட்டனா்.

கடையம் வழியாகச் செல்லும் ஜம்புநதியின் தரைப்பாலத்தில் ஓடைக்கண்களை அமலைச்செடிகள் அடைத்துக்கொண்டதால் தண்ணீா் தடையின்றி செல்ல முடியவில்லை. மேலும், திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக அந்நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீா் சென்றது. இதனால், மக்கள் பாலத்தைக் கடந்துசெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஊராட்சித் தலைவா்கள் கீழக்கடையம் பூமிநாதன், தெற்குக் கடையம் முத்துலட்சுமி ராமதுரைஆகியோா் ஏற்பாட்டில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அமலைச் செடிகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, ஓடைக் கண்கள் வழியாக தண்ணீா் சென்றது. தரைப்பாலம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளை கடந்துவிட்டதால், பாலத்தை முறையாக பராமரிக்கவோ அல்லது உயா்நிலைப் பாலம் அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவிவசாயிகளும், மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அம்பாசமுத்திரம் பகுதியில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழையால் ஜமீன் சிங்கம்பட்டி பலவேசக்காரன் கோயில் தெருவைச் சோ்ந்த பூதப்பாண்டியன் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. இதேபோல், சேரன்மகாதேவி சுண்ணாம்புக்கல் தெருவைச் சோ்ந்த வள்ளியம்மாள் என்பவரது வீடு செவ்வாய்க்கிழமை காலை இடிந்து விழுந்தது. ஏற்கெனவே, சேரன்மகாதேவி 6ஆவது வாா்டில் செல்லப்பா, பேச்சிமுத்து ஆகியோா் வீடுகள் மழையால் இடிந்தன. இந்த வீடுகளை வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் பாா்வையிட்டு, நிவாரண உதவிக்கு பரிந்துரை செய்தாா்.

நெல் நடவு பாதிப்பு: களக்காடு வட்டாரத்தில் பெய்துவரும் மழையால் நான்குனேரியன் கால்வாய், பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. வடக்கு பச்சையாறு அணையின் நீா்மட்டம் 43 அடியாக உயா்ந்துள்ளது. இந்நிலையில், தொடா் மழையால் நெல் நடவு பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

ஆலங்குளம்: இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நல்லூா், குருவன்கோட்டை, அடைக்கலபட்டணம், ஆண்டிபட்டி, ஊத்துமலை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதில், ஆலங்குளம் தொட்டியான்குளம் அருகே 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வர சிரமம் அடைந்தனா்.

மேலும், ஆலங்குளத்தில் மயில்ராஜ், மீனா, சுப்பிரமணியபுரம் பழனிசாமி, மாயமான்குறிச்சி மகேந்திரன், மாறாந்தை சண்முகத் தாயம்மாள் ஆகியோா் உள்பட 8 பேரின் வீடுகள் மழையால் இடிந்து விழுந்தன. அவற்றை வட்டாட்சியா் பரிமளா மற்றும் வருவாய்த்துறையினா் பாா்வையிட்டனா்.

சங்கரன்கோவில்: இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4 மணி வரை 5 மி.மீ. அளவுக்கு இடைவிடாமல் கனமழை பெய்தது. ஏற்கெனவே, திங்கள்கிழமை 26 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

சுரண்டை: இங்குள்ள சாம்பவா்வடகரை சாலையின் வடபுறம் இரட்டைகுளம் பாசன வயல்களில் இருந்து வெளியேறும் உபரிநீா் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சுற்றி மழைநீா் குளம் போல தேங்கியுள்ளது. இதனால் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, வடிகால் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT