தென்காசி

ஆலங்குளம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

23rd Nov 2020 10:59 AM

ADVERTISEMENT

ஆலங்குளம் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டியை அடுத்த கடங்கநேரி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆனைகுட்டி மகன் சிவன்ராஜ்(23). இவர் அப்பகுதியில் உள்ள பனை நார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சமுத்திரகனி என்பவரை அரிவாளால் வெட்டியதில் அவர் காயமடைந்திருந்தாராம். இதனையடுத்து அப்பகுதியில் சேர்மன் மற்றும் முருகேசன் ஆகியோர் தலைமையில் இரு குழுக்களாக பிரிந்து அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வந்தனராம்.

இந்நிலையில் முருகேசன் குழுவில் உள்ள செல்வக்குமார் மற்றும் ராஜா ஆகியோர் சிவன்ராஜை, ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்த அழைத்துச் சென்றனராம். அப்பகுதியில் உள்ள மணி முத்தா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் மூவரும் மது அருந்திய பின்னர், செல்வக்குமார், ராஜா ஆகியோர் சிவன்ராஜை அரிவாளால் வெட்டினராம். படுகாயமடைந்த சிவன்ராஜ் நிகழ்விடத்திலேயே இறந்தார்.

வீட்டை விட்டு சென்ற சிவன்ராஜ் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடிச் சென்ற போது அவர் தோட்டத்தில் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தென்காசி எஸ்.பி சுகுணா சிங், ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னி வளவன் மற்றும் ஊத்துமலை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த ஊத்துமலை காவல்துறையினர், 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT

Tags : tenkasi
ADVERTISEMENT
ADVERTISEMENT