தென்காசி

ரவணசமுத்திரம் வி.ஏ.ஓ. அலுவலகத்தைத் திறக்க வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம்

23rd Nov 2020 12:18 PM

ADVERTISEMENT

ரவணசமுத்திரத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தைத் திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்திற்குள்பட்ட ரவணசமுத்திரம் வருவாய் கிராமத்தில் நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்த அனுராதா என்பவர் 15 நாள்களுக்கு முன் பணி மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக அண்ணாமலை என்பவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ஆனால் அனுராதா பணி மாற்றத்தை ஏற்கவில்லையாம். மேலும் விடுமுறையில் சென்றதோடு ரவணசமுத்திரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தையும் பூட்டி சாவியைக் கொண்டு சென்று விட்டாராம்.

இதனால் அண்ணாமலை பொறுப்பு ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்தப் பகுதி மக்கள் வருவாய்த்துறை மூலம் பெறும் பல்வேறு சான்றிதழ்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் புகாரளித்தும் இதுவரை அலுவலகம் திறக்கப்படவில்லை. இதையடுத்து இன்று காலை ரவணசமுத்திரம், மந்தியூர், வீராசமுத்திரம் கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

உடனடியாக அலுவலகத்தைத் திறந்து கிராம அலுவலர் பொறுப்பேற்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு மணி நேரமாக வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். கடையம் காவல் ஆய்வாளர் ரெகுராஜன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

Tags : tenkasi
ADVERTISEMENT
ADVERTISEMENT