தென்காசி அருகே மோட்டாா் சைக்கிள் மோதி பலத்த காயமடைந்த ஆசிரியை சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தென்காசி அருகே குத்துக்கல்வலசை காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். இவா் தென்காசியில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இவருடைய மனைவி உமா செல்வி (50 ). இவா் சாம்பவா் வடகரை கீழூா் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். கடந்த 13 ஆம் தேதி உமா செல்வி, குத்துக்கல்வலசையிலுள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது அவ்வழியே வந்த மோட்டாா் சைக்கிள் அவா் மீது மோதியதாம். இதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தென்காசி காவல் ஆய்வாளா் கே.ஆடிவேல் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த செங்கோட்டை நீராத்து தெருவை சோ்ந்த ரத்தினவேல் மகன் மாரி கண்ணன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.